Friday, 14 October 2016

அசைவமும் அறிவியலும்


               நாம் உண்ணும் உணவு வகைகளை சைவம் அசைவம் என இரண்டு வகைகளாகப் பிரிக்கிறோம். தாவரங்களால் செய்யப்படும் உணவுகள் சைவம் எனவும் பிற உயிர்களைக் கொன்று சாப்பிட்டால் அது அசைவம் எனவும் வகைப்படுத்தப்படுகிறது.

                                  சைவர்கள் பிற உயிர்களை கொன்று உண்பதை பாவம் எனக் கருதினர். பிற உயிர்களைக் கொன்று உடல் வளர்ப்பதா என எண்ணினர். அசைவ உணவுகளை உண்ணாமல் விரதமிருந்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.  இவ்வாறு சைவம், அசைவம் என உணவு வகைகள் ஆரம்ப காலகட்ட்த்தில் வகைப்படுத்தப்பட்டு வந்தது. இந்த வகைப்பாடு அறிவியல் ரீதியாக சரியானதுதானா என்றால் நிச்சயமாக தவறானது என்றே சொல்ல வேண்டும்.

தாவரங்களுக்கு #உயிர்  உண்டு:

              தாவரங்களுக்கும் உயிர் உண்டு, தாவரங்களும் பிற உயிரினங்களை போன்று வாழ்க்கை நடத்துகின்றன என்று இந்திய அறிவியல் அறிஞர் டாக்டர் ஜகதீஸ் சந்திர போஸ் (1858 – 1937) கண்டறிந்தார். மற்ற உயிரினங்களைப் போன்று தாவரங்களும் துன்ப துயரங்களுக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகின்றன என்பதையும் கண்டறிந்தார்.

             சில போதைப்பொருள்களுக்கு உள்ளாகும்போது தாவரங்களும் தம் நினைவை இழந்து மயக்கமுறுகின்றன என்றும் டாக்டர் போஸ் 1902 ம் ஆண்டு அவர் வெளியிட்ட ஆய்வு நூலான The Reaction of living and Non_living  என்ற நூலில் ஆதாரங்களோடு வெளியிட்டார். அவரது கண்டுபிடிப்பால் தாவர உலகம் என்ற புதியதோர் உலகமே கண்டறியப்பட்டது.

                ஆக, தற்பொழுது தாவரங்களுக்கும் உயிர் உண்டு என நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் சைவ உணவு எனக் கூறும் உணவுகள் தாவரங்களால் செய்யப்பட்டவை. தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதால் தாவரங்களை கொன்று சமைத்துத்தான் உண்ணவேண்டும். அப்படியானால் இது எப்படி சைவ உணவாகும்?.

                 முட்டையை அசைவம் எனக் கூறுகின்றனர். முட்டையை அடைகாத்து ஓர் உயிரை உருவாக்க முடியும் என்பதால் அது அசைவம் என விளக்கம் கூறுகின்றனர். அப்படியானால் அரிசி முதலிய தானியங்கள், பயறு வகைகள் அனைத்தும் தாவரங்களின் விதைகள் தானே. இந்த விதைகளால் உயிருள்ள தாவரங்களை உருவாக்க முடியுமல்லவா. அப்படியானால் தானியங்களும், பயறு வகைகளும் எப்படி சைவ உணவாக முடியும்?

                பால், தயிர் முதலிய உணவுகள் விலங்குகளிடமிருந்து கிடைப்பதால் அது சைவமா அல்லது அசைவமா என்பதில் மிகப்பெரிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கிறன.

            அக, இன்றைய காலகட்ட்த்தில் உணவு வகைகளை சைவம் அசைவம் என பிரிப்பது அறிவியலுக்கு முரணானது.
ஏன் அசைவம் உண்ண வேண்டும்:

             கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் பலர் அசைவ உணவுகளை உண்ண மறுக்கின்றனர். அசைவ உனவுகளை உண்ணாமல் இருப்பதை பெருமையாகவும், கௌரவமாகவும் கருதுகின்றனர். இந்து மத அமைப்புகளும் அசைவ உணவுகளை உண்ணக்கூடாது என பரப்புரை செய்து வருகின்றன. அசைவ உணவுகளை மறுப்பது இயற்கைக்கு எதிரானது. நிலையான உணவுச்சங்கிலி அமைப்பையே சிதைக்கக்கூடியது.

             இயற்கையிலேயே தாவரங்கள் மட்டுமே தாமாக உணவு தயாரிக்கின்றன. சூரிய ஒளி, நீர், கார்பன்-டை-ஆக்ஸைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி இலையில் உள்ள பச்சையத்தின் உதவியால் தாவரங்கள் உணவு தயாரிக்கின்றன. இதனால் உணவுச்சங்கிலி அமைப்பில் தாவரங்கள் உற்பத்தியாளர்கள் என அழைக்கப்படுகிறது. இந்த உற்பத்தியாளர்களை உண்டு வாழும் உயிரினங்கள் முதல் நிலை நுகர்வோர்கள் (முயல், மான், ஆடு) எனவும் முதல் நிலை  உற்பத்தியாளர்களை உண்டு வாழும் உயிரினங்கள் இரண்டாம் நிலை நுகர்வோர்கள் (ஓநாய், நரி) எனவும் முதல் மற்றும் இரண்டாம் நிலை நுகர்வோர்களை உண்டு வாழும் உயிரினங்கள் மூன்றாம் நிலை நுகர்வோர்கள் (சிங்கம், புலி) எனவும் அழைக்கப்படுகிறது. இயற்கையாகவே உற்பத்தியாளர்களான தாவரங்களின் இனப்பெருக்க வேகம் மற்ற உயிரின்ங்களை விட மிக அதிகம். முதல்நிலை நுகர்வோர்களான முயல், மான், ஆடு போன்றவை உற்பத்தியாளர்களை உண்டு வாழ்கின்றன. இதனால்தான் உற்பத்தியாளர்களின் மிக அதிகமான இனப்பெருக்க வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. உற்பத்தியாளர்களின் இனப்பெருக்க வேகத்தை கட்டுப்படுத்துவதே முதல்நிலை நுகர்வோர்களின் முக்கிய்மான பணியாகும். இதேபோல் முதல்நிலை நுகர்வோர்களின் இனப்பெருக்க வேகம் இரண்டாம்நிலை நுகர்வோர்களின் இனப்பெருக்க வேகத்தைவிட அதிகம். இரண்டாம்நிலை நுகர்வோர்களான நரி, ஓநாய் போன்றவை முதல்நிலை நுகர்வோர்களை உண்டு வாழ்கின்றன. இதனால் முதல்நிலை நுகர்வோர்கள் அளவுக்கு அதிகமாக பல்கிப் பெருகாமல் கட்டுப்படுத்தப்படுகிறது. இதேபோல் இரண்டாம்நிலை நுகர்வோர்களின் இனப்பெருக்க வேகம் மூன்றாம்நிலை நுகர்வோர்களான சிங்கம், புலி போன்றவற்றால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் உணவுச்சங்கிலி அமைப்பு சீர்குலையாமல் நிலையாக உள்ளது.

                  வீட்டு விலங்குகளான ஆடு, மாடு, கோழி போன்றவை தாவரங்களை உண்டு வாழ்பவை. இவற்றின் இனப்பெருக்க வேகம் மனிதனின் இனப்பெருக்க வேகத்தைவிட மிக அதிகம். இவைகள் வீடுகளில் வளர்க்கப்படுவதால் இவற்றின் இனப்பெருக்க வேகத்தை கட்டுப்படுத்தக்கூடிய ஒரே உயிரினம் மனிதன் மட்டுமே. மனிதன் அசைவம் உண்ணக்கூடாது என முடிவுசெய்தால் இந்த உயிரினங்கள் பல்கிப் பெருகிவிடும். இது உணவுச்சங்கிலியில் மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும். அதனால் மனிதகுலம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உயிரினங்களும் பாதிக்கப்படும். ஆகவே, கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் பரப்பப்படும் மூடநம்பிக்கைகளை கைவிடுவோம். இயற்கையை பாதுகாப்போம்!

அறிவு சார் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன..

                                                தொடர்புக்கு..
                                                க.காளீஸ்வரன்,
                                                        அலைபேசி- 9597651587

No comments:

Post a Comment