Friday, 14 April 2017

"வாழ்த்துக்கள்" என்பது சரியா?

வாழ்த்துகள், வாழ்த்துக்கள்.... எது சரி?
வாழ்த்து... என்பது வன்தொடர்க் குற்றியலுகரம். எனவே, வாழ்த்துக்கள் என்பதும் சரியே என்று வாதிடுகின்றனர்.

'வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் மிகும்' என்கிற விதி சொல்லோடு சொல் புணரும் பொருட்புணர்ச்சிக்கே பொருந்தும். விகுதிப்புணர்ச்சிக்குப் பொருந்தாது.

வன்தொடர் குற்றியலுகரம் என்றால் என்ன?

உகாரம் - உ என்ற ஒலிக்குறிப்பில் ஒலிக்கும் எழுத்துகள் (கு, சு, டு, து, பு.....)
மாத்திரை - ஒரு எழுத்தினை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு (நெடிலுக்கு இரு மாத்திரை, குறிலுக்கு ஒரு மாத்திரை)
குற்றியலுகரம் என்றால், ஒரு சொல்லின் இறுதியில் உள்ள உகார எழுத்து தன் இயல்பான கால அளவான ஒரு மாத்திரையில் இருந்து குறைந்து அரை மாத்திரை அளவில் ஒலிப்பது ஆகும்.
குற்றியலுகரம், இறுதியில் உள்ள உகாரத்தின் முன் வரும் எழுத்தை வைத்து ஆறு வகையாக வகைப்படுத்தப்படுகின்றது.

1. நெடில் தொடர் குற்றியலுகரம் - எ.கா. ஆடு, மாடு
2. ஆயுதத்தொடர் குற்றியலுகரம் - எ.கா. எஃகு, அஃது
3. உயிர்த்தொடர் குற்றியலுகரம் - எ.கா. வரவு, மிளகு
4. வன்தொடர் குற்றியலுகரம் - எ.கா. பாக்கு, வாழ்த்து
5. மென்தொடர் குற்றியலுகரம் - எ.கா. சங்கு, பந்து
6. இடைத்தொடர் குற்றியலுகரம் - எ.கா. செய்து, பள்ளு

இதில் நிலைமொழி வன்தொடர் குற்றியலுகரமாக இருந்து, வருமொழி வினையெச்சமாக அமைந்தால் வலி மிகும்.
எ.கா.
படித்து + சொன்னான் = படித்து'ச்' சொன்னான்
கடித்து + தின்றான் = கடித்து'த்' தின்றான்.
இதனை அடிப்படையாக வைத்தே வாழ்த்துக்கள் என்று சொல்வதையும் சரி என்கிறார்கள்.

வருமொழி வெறும் விகுதியாக இருந்தால் இந்த விதி பொருந்தாது. சொற்புணர்ச்சிக்கே இவ்விதி பொருந்தும்.
வாழ்த்து + சொன்னான் = வாழ்த்து'ச்' சொன்னான்....... என்பது சரி.
வாழ்த்து + கள் = வாழ்த்துகள்..... என்பது சரி.
வாழ்த்து + கள் = வாழ்த்து'க்'கள்..... என்பது சரி அல்ல.

கள் என்பது விகுதியாக மட்டுமல்லாமல் பனைவடிச்சாறு என்ற பெயர்ச்சொல்லாகவும் இருக்கின்றது. எனவே, கவனமாகப் பயன்படுத்த வேண்டியிருக்கின்றது.

தோப்பு + கள் = தோப்புகள்..... பன்மையைக் குறிக்கின்றது
தோப்பு + கள் = தோப்பு'க்'கள்..... தோப்பில் இருந்து பெறப்பட்ட கள் என்பதைக் குறிக்கின்றது.
அதே போன்று,
வாழ்த்து + கள் = வாழ்த்துகள்..... என்பது வாழ்த்தின் பன்மையைக் குறிக்கின்றது.
வாழ்த்து + கள் = வாழ்த்து'க்'கள்..... என்பது வாழ்த்து என்னும் கள் என்பதைக் குறிக்கின்றது.

இரண்டு சொற்களும் சரிதான் எங்கே எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து.